ஹெலிகாப்டரில் பயணம் செய்த இராணுவ வீரர்கள் 14 பேரில் 13 பேர் உயிரிழப்பு என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள இராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினார்கள்.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் மேல் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. முதலில் 4 பேர் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பின்னர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார். அவரைத்தொடர்ந்து மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டது. தற்போது 14 பேர் மீட்கப்பட்ட நிலையில் 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
மேலும் மரபணு பரிசோதனை மூலம் உயிரிழந்தவர்களின் விவரங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 Comments