நியூசிலாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

          இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான  2வது 20 ஓவர் போட்டி நேற்றிரவு 7 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்  தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.


          முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் கப்டிலும், டேரில் மிச்சேலும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி மார்டின் கப்டில் 15 பந்துகளில் 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேரில் மிச்சேல் நிதானமாக விளையாடி 31 ரன்கள் சேர்த்து அவரும் வெளியேறினார். 

          ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணியானது அதிக ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இந்திய பந்துவீச்சாளர்கள்  நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தினர். பிறகு வந்த  க்ளென் பிலிப்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில்   ஹர்சல் படேல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களும் மற்ற பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

         இதனை தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய   ரோகித் சர்மா மற்றும்  கே.எல்.ராகுல் இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

          ரோகித் சர்மா 5 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாசி 36 பந்துகளில் 55 ரன்கள் அடித்து வெளியேறினார். கே.எல்.ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சவுதி வீசிய பந்தில் போல்ட் ஆனார். 18-வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 2 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

          இறுதியில் இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில்  இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.