குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. அந்த கட்டிடம் ஒன்றின் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
ஏழாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளார்.
இந்த நிலையில், லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த சம்பவமானது காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது. ஆனால் இந்த விபத்து குறித்து கட்டடத்தின் உரிமையாளர் போலீசாருக்கு 11 மணியளவில் தகவல் தெரிவித்ததாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டடத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சஞ்சய் பாபுபாய் நாயக், ஜெகதீஷ் ரமேஷ்பாய் நாயக், அஷ்வின்பாய் சோமாபாய் நாயக், முகேஷ்பாய் பாரத்பாய் நாயக், முகேஷ் பாரத்பாய் நாயக், ராஜ்மல் சுரேஷ்பாய் கராடி, பங்கஜ்பாய் சங்கர்பாய் கராடி உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த 8 பேரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்; மேலும் அவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இந்நிலையில் கட்டடத்தில் வேலை செய்த ஊழியர்களின் உறவினர்கள், விபத்து நடந்தவுடன் ஏன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை? ஏன் தாமதமாக தெரிவித்தனர்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளுர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.


0 Comments