புளியின் மருத்துவ பலன்கள்

     அறுசுவைகளில் ஒன்றான ‘புளிப்பு’ சுவை நிறைந்தது புளி. சமையல் அறையில் தவறாது இடம் பிடிக்கும் பொருட்களின் பட்டியலில் புளியும் ஒன்றாகும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் புளி, புற்றுநோய் செல்களைத் தடுக்கும் வல்லமை உடையது. வலி, வீக்கத்தைக் குறைக்கும் என பல மருத்துவக்குணங்களைக் கொண்டது.
     புளிய மரத்தின் இலையானது வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கும். தளிர் இலை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். புளியம் பூ குளிர்ச்சி தரும். புளியங்காய் பித்தம் தணிக்கும். புளியம் பழம் குடல் வாயு அகற்றும், குளிர்ச்சி தரும், மலமிளக்கியாக செயல்படும். புளிய மரப்பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். தாது பலம் தரும். புளியங்கொட்டை சிறுநீர் பெருக்கும். 
  1. இதன் தளிர் இலைகளைத் துவையல் செய்து சாப்பிட்டால் பித்தம் சமனாகி, வயிற்று மந்தம் நீங்கும்.
  2. 30 மில்லி புளிய இலைச்சாற்றை காய்ச்சிக் கொதிக்க வைத்து, பால் கலந்து சாப்பிட்டால் ரத்தபேதி, சீதபேதி குணமாகும்.
  3. ஆமணக்கு நெய் தடவி, புளிய இலையை ஒட்டவைத்து 2 மணி நேரம் கழித்து சூடான நீரைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யும்போது, கை, கால் வீக்கம், மூட்டுவலி, கை, கால், தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள சுளுக்கு நீங்கும்.
  4. புளியம் பூவை அரைத்து கண்ணைச் சுற்றிப் பற்று போட்டால் கண்வலி, கண் சிவப்பு குறையும்.
  5. உப்பு மற்றும் புளியை சம அளவு எடுத்து அரைத்து, உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கில் சதை வளர்வது தடுக்கப்படும்.
  6. புளியங்கொட்டையின் தோல், மாதுளம் பழத்தோல் இரண்டையும் சம அளவு கலந்து, சூரணம் செய்து சுண்டக்காய் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பேதி, வாந்தி, வாயு பொருமல் தீரும்.
  7. புளியம் பழம் மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணியைச் சம அளவு எடுத்து அரைத்து, இரண்டு நெல்லிக்காய் அளவு உருண்டையாக்கி காலை மற்றும் மாலை என 12 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ‘கருப்பை இறக்கம்’ சரியாகும்.
  8. புளியங்கொட்டைத் தோல், கருவேலம்பட்டைத் தூள் சம அளவு கலந்து உப்புப் பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் கூச்சம், பல் ஆடுதல், சீழ் வடிதல், ரத்தக்கசிவு, ஈறு வீக்கம்  ஆகியவை குணமாகும்.
  9. புளியம் பட்டைத் தூளும், உப்பும் கலந்து வெண்ணிறமாகும் வரை வறுத்து அரைத்த பொடியை, 100 மில்லி கிராம் எடுத்து சீரகத் தண்ணீரில் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் செரிமானக் கோளாறு, வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.