| Mohammad Shami |
துபாயில் நடந்த உலகக் கோப்பை டி 20 போட்டியில், பாகிஸ்தானுடன் லீக் போட்டியில் மோதிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 17.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி, 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை வாரி வழங்கினார். இதனையடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு ஷமியின் பந்துவீச்சும் முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் முகமது ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் மோசமான கருத்துக்களை பதிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முகமது ஷமிக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தனது டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் விளையாடிய 11 பேரில் முகமது ஷமியும் ஒருவர். முகமது ஷமி மட்டும் தனியாக விளையாடவில்லை. உங்கள் சக வீரர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மோசமாக அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் ட்ரோல் செய்யப்படும்போது, அவருக்கு ஆதவாரக நிற்காமல், கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இந்திய அணியினர் அனைவரும் மைதானத்தில் முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்தது எந்தவிதத்திலும் பொருட்படுத்த முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில், “முகமது ஷமி.. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்களுக்கு யாரும் அன்பை தராததால், அவர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில், “இந்திய அணியை நாம் ஆதரிக்கிறோம் என்றால் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். முகமது ஷமி உலகத்தரமான பந்துவீச்சாளர். மற்ற வீரர்களை போலவே, அன்று ஷமிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. நான் முகமது ஷமிக்கு பின்னாலும், இந்திய அணிக்கு பின்னாலும் நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

0 Comments